சமையல் காஸ் சிலிண்டர் விலையை, ஜூலை 1ம் தேதி முதல் மாதம் ரூ.4 உயர்த்தி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மானியம் முழுவதையும் ரத்து செய்யப் போவதாக மக்களவையில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று முன்தினம் அறிவித்தார்.

Special Correspondent

காஸ் மானியம் விஷயத்தில் மக்களை மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாக கூறி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள், சமையல் காஸ் சிலிண்டர் மானியத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என மாநிலங்களவையில் ஒன்றாக இணைந்து வலியுறுத்தின.

திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் தெரிக் ஓ பிரையன்,பேசுகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பீப்பாய்க்கு 111 அமெரிக்க டாலரிலிருந்து 48 டாலராக குறைந்துவிட்டது. ஆனால் மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் காஸ் ஆகியவற்றின் விலையை அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசு அளித்த வாக்குறுதிகள் என்னாச்சு? அதை ஏன் அமல்படுத்தவில்லை?’’ என்றார்.

மார்க்சிஸ்ட் எம்.பி. சீதாராம் யெச்சூரி பேசுகையில், ‘‘பிரதமர் வேண்டுகோள்படி, ஏழைகளுக்கு மானிய விலை காஸ் சிலிண்டர் கிடைப்பதற்காக, வசதியானவர்கள் தாங்களாக முன்வந்து மானியத்தை விட்டுக் கொடுத்தனர். ஆனால் தற்போது அனைத்து ஏழைகளுக்கும், சிலிண்டர் விலையை ஒவ்வொரு மாதமும் ரூ.4 உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த முடிவை அரசு திரும்ப பெற வேண்டும்’’ என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், ‘‘ஏழைகளுக்கு மானிய விலை சிலிண்டர் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் தாங்களாக முன்வந்து தங்களின் கேஸ் மானியத்தை விட்டுக் கொடுத்தனர். ஆனால் ஏழைகளை அரசு கொல்கிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்கள் விலை பல மடங்கு குறைந்துள்ள நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ஓராண்டுக்குள் ரூ.48 வரை அரசு உயர்த்துவதை ஏற்க முடியாதது’’ என்றார். அமளி தொடர்ந்ததால் மாநிலங்களவையை மதியம் 12 மணி வரை குரியன் ஒத்திவைத்தார்.