உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் மரணம் அடைவதைத் தடுக்க சொந்தப் பணத்தில் ஆக்சிஜன் வாங்கிக் கொடுத்து குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர் கபீல் கான் பணியில் இருந்து பிஜேபி அரசு அதிரடியாக நீக்கியுள்ளது. இது சமூகவலைதளத்தில் பல லட்ச பேர்கள் கண்டித்து வருகின்றனர்.

Special Correspondent

கடந்த ஐந்து நாட்களாக பிஆர்டி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், 72 குழந்தைகள் பரிதாபமாக பலியானார்கள். இதனையடுத்து, குழந்தைகளைக் காப்பாற்ற தனது கார் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்களை, சொந்த செலவில் வெளியில் இருந்து வாங்கி வந்தார் டாக்டர் கான்.

இதனால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாவதில் இருந்து பாதுகாக்கப்பட்டனர். இதனால் ஏழை எளிய பெற்றோர்களுக்கு டாக்டர் கானை ஒரு ஹீரோ போல நினைத்துப் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், டாக்டர் கபீல் கானை மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. காரணங்கள் எதனையும் சொல்லாமல், குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர் கான் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது உபியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உபியில் 72 குழந்தைகள் உயிரிழந்துள்ளதற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை என்று ஆதித்யநாத் கூறியிருந்த நிலையில், ஆக்சிஜன் வாங்கி வந்து குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர் கான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைதளத்தில் டாக்டர் கபீல் கான் ஆதரவு பலமாக பெருகி வருகிறது.