மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதால் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Special Correspondent

முதல்வராக பதவியேற்ற திரு எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 16 ஆம் தேதியிலிருந்து ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஜெயலலிதாவின் மரணம் குறித்து எவ்வித விசாரணைக்கும் உத்தரவிடவில்லை. விசாரணைக் கமிஷனை அமைக்கவும் முன் வரவில்லை. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு வைத்தியநாதன் அவர்கள், “ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது”, என்று கூறிய பிறகும் கூட இப்படியொரு விசாரணைக் கமிஷனை அமைக்கவில்லை. மாறாக, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது”, என்று பேட்டியளித்த டாக்டர் சீதாவை ஒரு பெண் என்றும் பாராமல் கைது செய்து சிறையில் அடைத்தது திரு. எடப்பாடி பழனிசாமி அரசுதான். ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள மர்மங்களை விசாரிப்பதில் திரு. எடப்பாடி பழனிசாமிக்கு உண்மையில் ஆர்வமும், அக்கறையும் இருக்குமென்றால், மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பை ஓபிஎஸ் அணியில் உள்ள மாபா பாண்டியராஜன் திருப்தியுடன் வரவேற்றுள்ளார். ’’ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்திற்கு கிடைத்த வெற்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், அதே ஓபிஎஸ் அணியில் உள்ள கே.பி.முனுசாமி, ‘’ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். முதல்வர் தனிநபர் கமிஷன் அறிவித்திருப்பதால் எங்களது கோரிக்கை நிறைவேறவில்லை. சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை’’ என்று தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தாலும், இதன் மூலம் எந்த உண்மையும் வெளிவராது என்பது அவருக்கு தெரியும். இன்னும் கேட்டால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற எண்ணமும் பினாமி முதலமைச்சருக்கு இல்லை.

எனவே, வெற்றுச் சடங்குகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.’’ என்று பாமகவின் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.