இந்தியாவில் அரசு இணையதளங்களுக்குள் ஊடுருவி ஆதார் தகவல்களை அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ சுருட்ட நினைப்பதாக விக்கி லீக்ஸ் எச்சரித்துள்ளது.

Special Correspondent

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் இணையதள திருட்டுகளை அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியது விக்கி லீக்ஸ். இரு தினங்களுக்கு முன்பு விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள செய்தி இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ, அமெரிக்காவை மையமாக வைத்து இயங்கி வரும் கணிப்பொறி தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றின் உதவியுடன் ஆதார் தகவல் மையத்தின் இணையதளத்திற்குள் ஊடுருவி அவற்றை சுருட்ட முயற்சிப்பதாக பகீர் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கிராஸ் மேட்ச் டெக்னாலஜி என்ற அந்த நிறுவனம் தான் ஆதார் நிறுவனத்திற்கு தேவையான பயோ மெட்ரிக் தொழில் நுட்பங்களை செய்து தருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஆதார் தகவல்கள் கசிவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆதார் ஏற்கனவே தெரிவித்திருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.

இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனம் தான் 1 கோடியே 2 லட்சம் பேரின் ஆதார் தகவல்களை பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விக்கிலீக்ஸ் நேற்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ஆதார் தகவல்களை ஏற்கனவே சிஐஏ சுருட்டி விட்டதா அல்லது தற்போதுதான் சுருட்டுகிறதா என்றும் பதிவிட்டிருந்தது.

ஆனால் இந்த குற்றசாட்டை இந்திய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

கிராஸ் மேட்ச் நிறுவனம் தான் பயோ மெட்ரிக் தொழில் நுட்பங்களை உலகம் முழுமைக்கும் சப்ளை செய்து வருகிறது. ஆனால் தகவல்கள் எதுவும் அந்த நிறுவனத்திற்கு செல்வதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது. விக்கி லீக்ஸின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. ஆதார் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது. அதை எந்த நிறுவனத்தாலும் திருட முடியாது என்றனர்.

இரண்டு நாளுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் ஆதார் குறித்து அளித்த அதிரடி தீர்ப்பில் தனிமனித உரிமை என்பது ரகசிய காப்பு உரிமைகளில் ஒன்றே என்ற கூறிய நிலையில் விக்கிலீக்ஸ் தகவல் முக்கியமானதாகும் என்கிறார்கள் பொறியல் வல்லுனர்கள்.