தனி மனிதனின் சுதந்திரம் மற்றும் அந்தரங்கம் ஆகியவை அடிப்படை உரிமையா என்ற கேள்வி உச்சநீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ளது. இதனை முடிவு செய்ய தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களான கர்நாடகா, பஞ்சாப், புதுச்சேரி ஆகிய மாநிலங்களும் திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்குவங்க மாநிலமும் தங்களது நிலைப்பாட்டை அறிக்கைகளாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன.

Special Correspondent

அதில் தனி மனிதனின் அந்தரங்கம் அடிப்படை உரிமையே என அந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளன. அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளில் தனி மனித சுதந்திரமும் ஒன்று என மேற்கண்ட மாநிலங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஆதாரை கட்டாயமாக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆதார் கட்டாயமா என்பதை தீர்மானிப்பதற்கு முன்னதாக அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை மீறப்படுகிறதா என்பதில் முடிவு காண உச்சநீதிமன்றம் விரும்பியது. அதன் காரணமாகவே இப்பிரச்சனையை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

மாநில உரிமைகளை பிஜேபி மத்திய அரசு பறித்து வருகிறது என்ற குற்றசாட்டு வலுத்து வரும் நேரத்தில் இந்த வழக்கு முக்கித்துவம் பெறுகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.