வாகனம் ஓட்டிகள் தங்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். சோதனையின் போது அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது. மோட்டார் வாகன சட்டம் 1988- பிரிவு 3-ன்படி உரிய வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பொது இடத்தில் வாகனம் ஓட்ட கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை, அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தது. மேலும் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் ஓட்டுனர்கள் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அரசின் இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Special Correspondent

இதனை தொடர்ந்து போக்குவரத்து துறை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய பலர் பிடிபட்டனர். அவர்களுக்கு போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர். சென்னை நகரில் அண்ணாசாலை, பீச் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, எழும்பூர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆங்காங்கே போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக அசல் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சுகுமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். தமிழக அரசின் உத்தரவு மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிரானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, மோட்டார் வாகன சட்டம் பிரிவு 139-ன் படி ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கையில் வைத்திருப்பது பல நடை முறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மோட்டார் வாகன சட்டப் பிரிவு 139-ன் படி ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்கும் போது, தங்களுடைய அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, நீதிபதி துரைசாமி வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தார்.