கோவை-திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியான சாமளாபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடை கடந்த மாதம் 31ம் தேதி அகற்றப்பட்டது. இக்கடை அதே பகுதியில் அய்யன்கோவில் பிரிவு அருகே குடியிருப்பு பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டது. இக்கடை நேற்று மதியம் 12 மணிக்கு திறப்பதாக இருந்தது. இதையடுத்து, கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 500 பேர் 11 மணிக்கு ஒன்று திரண்டனர்.

அப்போது, அந்த வழியாக சசிகலா கோஷ்டி அணி கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ், மனைவி மற்றும் உறவினருடன், காரில் வந்தார். அவரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். தங்களது கோரிக்கையை முன்வைத்தனர்.

அவர், இது நியாயமான கோரிக்கை, நானும் போராட்டத்தில் பங்கேற்கிறேன்’ எனக்கூறி குடும்பத்தினருடன் மறியலில் கலந்து கொண்டார். இந்தநிலையில், திருப்பூர் மாவட்ட கூடுதல் டிஎஸ்பி. பாண்டியன் தலைமையில் போலீசார் குவிந்தனர். டாஸ்மாக் கடையை பூட்ட அதிகாரிகள் உத்தரவிட்டனர். சில நிமிடங்களில் கடையும் பூட்டப்பட்டது.

Special Correspondent

உடனே, எம்.எல்.ஏ. கனகராஜ், 'டாஸ்மாக் கடை மூடப்பட்டு விட்டதால், இத்துடன் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது' எனக்கூறி அங்கிருந்து தனது குடும்பத்துடன் கிளம்பி சென்றார். ஆனால், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். இது, தற்காலிக ஏற்பாடுதான்., கடையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் எனக்கூறி மறியலை தொடர்ந்தனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மக்கள் போராட்டம் விஸ்வருபம் எடுப்பதை கண்ட போலீஸ் மாலை 5 மணியளவில் போலீசார் கலைந்து செல்லும்படி எச்சரித்தும் பொதுமக்கள் ஏற்கவில்லை. இதையடுத்து, தடியடி நடத்த கூடுதல் டிஎஸ்பி. பாண்டியராஜன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, போலீசார் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தினர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாரபட்சமின்றி தாக்குதல் நடத்தப்பட்டதால் பொதுமக்கள் சிதறி ஓடினார்கள். எம்.எல்.ஏ. கனகராஜ் அங்கிருந்து புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் அப்பகுதி போர்க்களமாக மாறியது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எப்படி போலீசார் மூர்த்தனமாக மாணவர்கள் மீது நடந்து கொண்டனரோ அது போலவே போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலில் பலர் காயமடைந்தனர். அதே பகுதியை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் சிவகணேசன் (45) என்பவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவரை உடனடியாக பொதுமக்களில் சிலர் பாதுகாப்பாக அழைத்து சென்று, அருகில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இவ்வளவு நடந்தும் பெண்கள் கண்ணீருடன் தங்கள் குழந்தைகளை கையில் பிடித்த படியே அழுதவாறு இருந்ததால் கலைந்து செல்லும்படி கூடுதல் எஸ்.பி. பாண்டியராஜன் உத்தரவை ஏற்க மறுத்து விட்டனர். இதனால், ஆத்திரம் அடைந்த பாண்டியன், பெண்கள் கன்னத்தில் "பளார்... பளார்.." என தனது கைகளால் சிங்கம் படத்தில் சூர்யா விடுவது போல ஓங்கி அறை விட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண்கள் நிலைகுலைந்தனர்.

Special Correspondent

இதன் இடையே அதிமுக தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏ. கனகராஜுக்கு போலீசார் தடியடி நடத்தப்போகிறார்கள் என்பதை முன்கூட்டியே உளவுப்பிரிவு மூலம் தெரிந்துகொண்டு அங்கிருந்து நழுவி விட்டார். கடைசிவரை சம்பவ இடத்துக்கு மீண்டும் வரவில்லை. காயம் அடைந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும் இல்லை. இவர், கடந்த மாதம் தனது தொகுதிக்குட்பட்ட கல்குவாரியில் 2 பேர் உயிரிழந்தபோது, `மூடாவிட்டால், ஓ.பி.எஸ் அணிக்கு மாறப்போகிறேன். நான் ஒரு டைப்பான ஆள்’ என்று மிரட்டல் இருந்து அதேபோல்தான் நேற்றும் மிரட்டல் விடுத்துவிட்டு எஸ்கேப் ஆனார் என்று அங்குள்ள இளைஞர்கள் வெறுப்புடன் நம்மிடம் தெரிவித்தார்கள்.

தாக்கப்பட்டவர் சமான்யமான பெண்.. அதனால் அதிகாரிதான் தனது வீரத்தை நினைத்து பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும் இவர்களெல்லாம் பலம் படைத்த ரவுடிகள் முன்பும் அரசியல்வாதிகள் முன்பும் எப்படி பவ்யமாக பொத்திக்கொண்டு போவார்கள் என்பதை நினைத்து பார்க்கும்போது... ஏன், நிறையவே பார்த்திருக்கிறோம் என்று தனது வருத்தத்தை பதிவு செய்து உள்ளார் ஏழுமலை வெங்கடேசன் மூத்த பத்திரிகையாளர்.

தாக்குதலில் 2 பெண்கள், 10 ஆண்கள், 3 பத்திரிகையாளர்கள் காயம் அடைந்தனர். கூடுதல் எஸ்.பி.யின் இந்த செயல் அங்கிருந்த பெண்களிடம் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. போலீசாரின் செயலை கண்டித்து, சாமளாபுரம் ஈஸ்வரன் கோயில் திடலில் பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய ஏ.டி.எஸ்.பி. பாண்டியனை பதவி நீக்கம் செய்யவேண்டும். தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமலாக்கவேண்டும். டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்‘’ என்று வலியுறுத்தினர் . இதன்பிறகு, உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த திருப்பூர் மாவட்ட எஸ்.பி உமா, ‘போலீஸ் அதிகாரி தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தார்.

இதனையேற்காமல், குழந்தைகள் , பெண்கள் பத்திரிகை நிருபர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறவழியில் யாருக்கும் தொல்லை தராமல் உண்ணாவிரதம் இருந்த வந்த பெண்கள் மற்றும் 27 பொதுமக்களை திருப்பூர் போலீசார் தற்போது கைது செய்து உள்ளனர் .

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு