திருப்பூர் சாமளாபுரம் சாராயக்கடையை மூட மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி உத்தரவு என்பது போராட்டத்தின் வெற்றி செய்தி முடிவாக மட்டும் இல்லை., உயர்நீதிமன்றமும் தாக்கப்பட்டவர்களின் அரசே செலவை ஏற்க வேண்டும் என்று சொல்லி அதிமுக அரசின் தலையில் நங் என கொட்டி உள்ளது.

இது நிச்சயமாக தடியடி வாங்கியும் உண்ணாவிரதம் இருந்து கைதான அவ்வூர் மக்களுக்கு முக்கியமாக பெண்களுக்கு அவர்களின் பிரதிநிதியான ஈஸ்வரிக்கு கிடைத்த வெற்றி. மூர்க்கத்தனமாக பெண்களை தாக்கிய கூடுதல் டிஎஸ்பி. பாண்டியராஜனை , சமூக வலை தளத்தில் பெருவாரியான மக்கள் விடுத்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக அரசு விடுப்பில் அனுப்பியதாக செய்திகள் வருகிறது. அமைதியாய் சாலை ஓரத்தில் நின்று டாஸ்மாக் வேண்டாம் என்று ஊர் மக்கள் பொது நலனுக்காக குரல் கொடுத்ததால் வெறித்தனமாக ஓங்கி கன்னத்தில் பளார் பளார் என்று அடிக்கப்பட்டும் உண்ணாவிரதம் தொடர்ந்து நடத்திய நிஜ புரட்சி பெண்மணி துணிச்சலான ஈஸ்வரி பதில்கள் இதோ:

மதுவின்பாதிப்புகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மதுனால என்ன நடக்குதுன்னு நாஞ்சொல்லித்தான் தெரியோணுமுங்களா? அதான் வீடு வீட்டுக்கு அடிதடி, ரகளை நடக்குதே. கொழந்தைகளுக்கு சாப்பாடு கூட போட முடியாத நெலைல நெறையா பொண்ணுக இருக்காங்க. எத்தனையோ குடும்பங்க இதுனால பிரிஞ்சு வாழுதுங்க. எத்தன பேரு தாலி அறுத்து நிக்கறாங்க தெரியுங்களா?

Special Correspondent

இதுதான் நீங்கள் கலந்துகொள்ளும் முதல் போராட்டமா?

ஆமாங்க, மொத முறையா மதுக்கடைக வேணாம்னு போராடப் போனேன். அங்க இப்புடி ஆகிப் போச்சு. முன்னாடி விசைத்தறி சம்பந்தமான உண்ணாவிரதத்துல கலந்துருக்கேன். மதுக்கடைக்கு எதிரான போராட்டத்துக்கு நேத்துத்தான் மொதத்தடவை போனேன்.

உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் சென்றது தெரியுமா?

என் வீட்டுக்காரருக்கு நான் போறது தெரியாதுங்க. பக்கத்தூட்டுக்காரங்க வந்து கூப்டாங்க. செரின்னு கெளம்பிப் போயிட்டேன். இத்தன நடந்ததுக்கு அப்பறம்தான் அவருக்குத் தெரிஞ்சுது.

போராட்டக் களத்துக்குச் செல்லும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?

வீட்டுல ஒருத்தருக்கும் குடிப்பழக்கம் இல்லீங்க. ஆனா ஊர்க்காரங்க கொஞ்சப்பேரு அதுல சிக்கிச் சீரழிஞ்சுட்டு இருந்தாங்க. பொது மக்களும் அதுனால அவஸ்தப்பட்டாங்க. குடிச்சுட்டு வண்டி ஓட்டறதால எத்தனையோ ஆக்ஸிடெண்ட் வேற நடக்குது. எங்களுக்கும் எந்த பாதுகாப்பும் இல்ல. சரி நம்மளும் போய் போராடுவோம்னு நெனச்சி போனேன்.

போராட்டத்தில் நடந்த நிகழ்வு குறித்து உங்கள் கணவர், மகன்கள் என்ன சொல்கின்றனர்?

அவரு ரொம்ப வருத்தப்பட்டாருங்க. ‘கல்யாணமாகி 26 வருஷத்துல உன்னை ஒரு தடவையாவுது கைநீட்டி இருப்பனா? இப்போ அடுத்தவங்கிட்ட அடி வாங்கிட்டு வந்தி நிக்கறயே?‘ன்னு அழுதுட்டாருங்க. பொறந்தவீட்டுலயும் என்னை அடிச்சதில்லை. வருத்தப்பட்டவரு ஒண்ணுஞ் சொல்லாம எங்கியோ கெளம்பிப் போய்ட்டார். ஒரு பையன் தறி ஓட்டறான்; இன்னொரு பையன் காலேஜ்ல படிக்கறான். அவங்க ரெண்டு பேரும், ‘என்ன ஆனாலும் பரவால்லமா, நாம போராட்டத்துக்கு போலாம்‘னு சொல்றாங்க. ஆனாலும் ‘நாங்க இருக்கும்போது, ஒருத்தரு நம்ம அம்மாவை அடிச்சிட்டாரே’ன்னு அவங்களுக்கு வருத்தம்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதி நாளிலும் காவல்துறை தனது அராஜகத்தை நிறைவேற்றியது. இப்போது மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின் போதும் கொடூரமாய் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல்துறையின் போக்கு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. முழுசா மதுவிலக்க அமல்படுத்தணும். அந்த ஏடிஎஸ்பியை வேலைய வுட்டுத் தூக்கணும் அவ்வளவுதான்.

எப்படி இருக்கிறீர்கள்?

பளார்னு அறைஞ்சதுல காதுல இன்னும் வலி இருக்குதுங்க. லத்தியால் கால்ல பயங்கரமா அடுச்சுப் போட்டாரு. உட்காரவே முடியல. சாயந்தரம் ஸ்கேன் பாக்கோணும்னு ஆஸ்பத்திரில கூப்டுருக்காங்க. போயிப் பார்த்தாத்தான் என்னனு தெரியும்.

முழுமையான மதுவிலக்கு சாத்தியமா?

முயற்சி செஞ்சா கண்டிப்பா முடியுங்க. போராட்டத்துல கலந்துக்கிட்ட எல்லாருக்கும் அடி வுழுந்துச்சு; அதுல எனக்கு அதிகமா வுழுந்துருச்சுங்க. அதுனால எல்லாரும் வந்து எங்கட்ட கேக்கறாங்க. என்னையப் பொருத்தவரைக்கும் வீட்டுக்காக மட்டுமல்ல; நாட்டுக்காகவும், பொண்ணுகளுக்காகவும் நல்லது நடக்கோணும். இத்தனை அடிய வாங்கீட்டு வந்தாச்சு; இனி என்ன நடந்தாலும் ஒரு கை பார்த்துடலாம்னுதான் தோணுது.

உரையாடல் உதவி : முகநூல் எழுத்தாளர்கள் ராஜேந்திரன் வேலுசாமி மற்றும் கனி ஓவியா

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு