டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் 41 நாட்கள் போராடிய தமிழக விவசாயிகள் சென்னை புறப்பட்டனர். டெல்லியில் இருந்து தமிழ்நாடு விரைவு ரயிலில் விவசாயிகள் நேற்று சென்னைக்கு கிளம்பினர். நாளை காலை விவசாயிகள் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வந்தடைவார்கள் என தகவல்.

Special Correspondent

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாய கடன் தள்ளுப்படி காவேரி மேலாண்மை தீர்ப்பை அமுல்படுத்த கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், தமிழக விவசாயிகள் கடந்த 41 நாட்களாக தினம் தினம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நிர்வாணம் போராட்டத்தை தொடர்ந்து உச்சகட்டமாக சிறுநீர் குடிக்கும் போராட்டம் அறிவித்த நிலையில் நேற்று காலை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்துவதாக உத்தரவாதம் அளித்துவிட்டுச் சென்றார். பிரதமர் மோடி எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என முன்னதாக அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மே-15 க்குள் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார். முதல்வரும் மத்திய அரசு இதற்கான முயற்சிகளை எடுக்கவில்லையெனில் நாங்கள் முன்னெடுக்கிறோம் என உறுதியளித்துள்ளார்.

எனவே, வரும் மே-25 வரை எங்களது இந்தப் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறோம். எங்கள் கோரிக்கைகள் அவர்கள் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தைத் தொடர்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி விவசாயிகள் ஆதரவாக பந்த் அறிவித்த நிலையில் மு க ஸ்டாலின் டெல்லி போராட்டதை விடுத்து நாளை தமிழ்நாட்டு முழு வேலை அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு வருமாறு அறிவித்த நிலையில் விவசாயிகள் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு