இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரித்தை வெளிக்காட்டும் வகையில் கீழடி அகழாய்வு அமைந்துள்ளது. அதில் வேத கால நாகரிகத்தின் எந்தச்சுவடும் இல்லாத நிலையில், அதனை இட்டுக் கட்டும் முயற்சியாகவே தற்போது ஸ்ரீராமன் என்ற அனுபவமில்லாத ஒருவரை கீழடி அழகாய்வுக்கு பொறுப்பேற்க வைத்துள்ளது மத்திய பாஜக அரசு என்று குற்றம் சாட்டிய மே 17 இயக்க நிறுவனர் திருமுருகன் காந்தி தெரிவித்தவை :

“திறமையான அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணா-வை பணியிட மாறுதல் செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது? தங்களுக்கு சாதகமாக பொய்யான வரலாற்றைத் திரிக்கின்ற முயற்சியை பாஜக அரசு எப்போது ஆட்சிக்கு வந்தாலும் நடைபொறும். தற்போதும் அதைப்போன்றே நடந்துவருகிறது”.

Special Correspondent

"மதுரையில் அமையவேண்டிய அருங்காட்சியகத்தையும் பாஜக தற்போது தடுத்து வைத்துள்ளது. அதேபோன்று கீழடி அகழாய்விற்கான நிதி ஒதுக்கீட்டையும் குறைத்துள்ளார்கள். எங்களது கோரிக்கை என்பது கீழடி அகழாய்வு தங்கு தடையின்றி நடைபெற வேண்டும்".

அதற்கு அமர்நாத் ராமகிருஷ்ணா போன்ற அதிகாரிகளை மீண்டும் அப்பணியில் அமர்த்த வேண்டும். மதுரையில் மிகப் பெரும் தொல்லியல் அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும். தொல்லியல் துறையைப் பொறுத்தவரை சர்வதேச அளவில் பின்பற்றப்படும் விதிமுறைகளையே இந்திய தொல்லியல்துறையும் பின்பற்ற வேண்டும். அதுவரை பாஜக-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் யார் தமிழகம் வந்தாலும் நாங்கள் கருப்புக்கொடி கட்டிப் போராடுவோம்’ என்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கீழடியில் அகழ்வாராய்ச்சி 5 ஆண்டுகளுக்கு தொடரும் என்று மத்திய சுற்றத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிக அடையாளங்கள் கிடைத்துள்ளன என்றும் கீழடியில் அகழ்வாய்வு 2 ஆண்டுகளாக நடைபெறுகிறது என்றும் தெரிவித்தவர் கடந்த 2 ஆண்டில் கிடைத்த சான்றுகள் புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகாரிகள் மாற்றப்படுவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி தான் அமர்நாத் மாற்றப்பட்டு ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். அகழ்வாராய்ச்சியில் தமிழர் நாகரிக அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சிக்காக ரூ.40 லட்சம் போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

கிழடியில் அகழ்வாராய்வு பணியை பார்வையிட வந்த மத்திய சுற்றத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி மக்கள் விடுதலை கட்சியின் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான முருகவேல்ராஜன், தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண்டன கோஷம் செய்தனர்.

ஆனால் அவர்கள் கோஷம் போட்டதைப் பார்த்ததும், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமையில் வந்த 100க்கும் மேற்பட்டவர்கள், கோஷம் செய்தவர்கள் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார், முருகவேல்ராஜன் தலைமையில் வந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதாக கூறி கைது செய்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தாக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக முருகவேல்ராஜன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக தமிழ் இயக்கங்கள் சொல்லும் மத்திய அரசு மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது என்றும், "அந்த ஒரு ஆளுதான் நியாயமாக வேலை பார்ப்பார். மற்றவர்கள் பார்க்க மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்” என்றும் அதே போல அமர்நாத் இடத்திற்கு இன்னொருவரை போட்டிருப்பதாகவும், அவர் தமிழை ஓரளவு புரிந்து கொள்வார் என்றும் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறினார்.

பேசுவதையே ஓரளவிற்குத்தான் ஒருவரால் புரிந்து கொள்ள முடியும் என்றால், அவருக்கு எப்படி தமிழர்களின் ஆதிகால பண்பாட்டை புரிந்து கொள்ள முடியும் என்றும் தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி திருப்தி அடையாத தமிழ் இயக்கங்கள்மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்கள் எழுப்பின.

இப்போராட்டத்திற்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் முன்னிலை வகித்தார். போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு