பிள்ளையார் வழிபாடு என்பவர் கௌதம புத்தரின் மாற்றியமைக்கப்பட்ட வழிபாடு என்பது ஏறக்குறைய சரியே. ஆனால், அது வரலாற்றின் ஆதி வரை தேடாமல், தமக்குத் தோதான இடத்தில் கிடைத்த அடையாளத்தைப் பொறுத்திக் கொள்வது மாதிரிதான்.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் இன்றுள்ள கணபதி எனும் யானைத்தலையர் வழிபாடு ஆறாம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் மண்ணில் இருந்ததில்லை.

Special Correspondent

ஆனால், யானை, காளை, எலி, மயில், சேவல் போன்ற குலக்குறிகள் ஒவ்வொரு சாரருக்கும் அடையாளச் சின்னங்களாக இருந்திருக்கிறது. அந்தந்த இனங்கள் தங்களுக்கிடையே நிகழ்ந்த போர்கள், வெற்றி, தோல்வி, சரண் புகுதல், அடிமைப்படுத்தப்படல் போன்ற கலப்பின் வழியாக, அடக்கப்பட்ட இனத்தின் ஒவ்வொரு குலக்குறியையும் ஆதிக்க இணத்தின் ஆபரண, வாகனங்களாகச் சின்னங்களாக மாற்றமடைந்தன.

சமண, பௌத்த மதங்கள் சீர்பெற்றெழுந்த காலகட்டத்தில் பல இனங்களின் குலக்குறிகள், வழிபாடுகளைத் தமக்குள் ஈர்த்துக் கொண்டன. இவ்விரு மதங்களின் பெரிய வெற்றியே இந்த ஈர்த்துக்கொள்ளும் இயல்புதான்.

உதாரணமாக இரு செய்திகளைச் சொல்லலாம். ஒன்று, ஏசு மதத்தில் அவர் வாழும்போதும், இறந்தபோதும் சிலுவை கிறிஸ்தவர்களின் புனித அடையாமாக இருக்கவில்லை. பின் வந்தவர்கள் இயேசுவின் குறியீடாக சிலுவையை பிரஸ்தாபித்தார்கள்.

இரண்டு, வேட்டையில் ஈடுபடுத்தப்பட்ட வேல் வழிபாடு, பிறகு வந்த முருகு எனும் தமிழ் தலைவனின் வீரத்திற்கான அடையாள ஆயுதமாக்கப்பட்டது.

சமணத்தில் ஒவ்வொரு தீர்த்தங்கரர்களுக்கும் தனித்தனி வாகனளும், சின்னங்களும் உண்டு. அவை காளை, யானை, முதலை, குதிரை, யானை, குதிரை தலை கோட்டான், காண்டாமிருகம், ஆடு, பன்றி, ஆமை, பாம்பு, சிங்கம், பெண் எருமை என்று 24 விதமான சின்னஞ்சிறு இனங்களின் குலக்குறி அடையாளம்.

சமண தீர்த்தங்கர்களின் சின்னங்கள் என்று பார்த்தால் சங்கு தாமரை, ஸ்வஸ்திக், வளர்பிறை ஏன் அரசமரம் கூட சமணத்தின் சின்னங்களாக உண்டு. இங்கே சின்னங்களுக்கும் வாகனங்களுக்குமான வேறுபாட்டை நீங்கள் கவனித்துக் கொள்ளலாம். தமக்குக் கீழ் அடிமைப் படுத்தப்படும் குலக்குறிகள் வாகனங்களாகவும், தமக்கு வலிமை சேர்க்கும் குலக்குறிகள் சின்னங்களாகவும் மாறியிருக்கின்றன.

Special Correspondent

பௌத்தத்திலும் இதேதான் நிகழ்ந்துள்ளது. புத்தர் அரசமரத்தை தன் வலிமையான அடையாளமாக்கினார். அவர் பிரச்சாரத்தைக் கேட்ட பல பிரதேசங்களின் சிற்றரசர்கள் அவர் தாழ்பணிந்து மணிமுடியை இறக்கினார்கள். அவர்களின் அடையாளங்கள் பௌத்தத்துடன் இணைந்தன.

அவற்றில் ஒன்று விநாயகம். ‘வினை நீத்த அறிவர்களான துறவிகளே!’ மத வழிபாட்டுக்குரியவர்களானார்கள். ஏற்கனவே மக்கள் மனத்தில் வினைதீர்க்கும் வடிவமாக இடம்பிடித்திருந்த குறியீடுகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள்.

விஹாரைகளால் வளர்ந்த பவுத்தமும், பள்ளிகளால் பரவிய சமணமும் இம்மாதிரியாக நம்பிக்கைகளையும், குலக்குறிகளைத் தம் அடையாளங்களாகப் பயன்படுத்திக் கொண்டதுண்டு. பின்பாக, இவ்விரு மதங்களையும் வீழ்த்தி, எழுச்சி பெற்ற வைதீக மதங்களும் அதே வேலையை புனையப்பட்ட புராணங்கள் வடிவில் செய்தன.

இன்றைக்கிருக்கும் கொண்டாட்டமான வழிபாடு அதிகம் பழசில்லை. அது 1893ல் திலகரின் திட்டப்படி, இந்து மத உணர்வை ஒன்றுகுவிக்கும் பொருட்டு அரசியலாக்கப் பட்டது தான்.

நிஜத்தில், பிள்ளையார் ஆதி தமிழ் நிலத்தில் வினை, வழிபாட்டுக்குரிய கிராமிய தேவதை. பிடித்து வைத்த மண்ணில் உருவாக்கப்பட்டவர். அவருக்கு ஆனைத்தலை, தொந்தி உடல், கணபதி எனும் தலைமைத்துவம் எல்லாம் கிடையாது. அவை பிற்காலத்தைய சேர்க்கைகள். இன்றைக்கு அதன் நவீன மாதிரிகளை நிறுவன மயமான இந்து மதம் பயன்படுத்திக் கொள்வதுபோல, பௌத்தமும் அன்று பயன்படுத்திக் கொண்டதன் எச்சங்கள் நம்மிடையே உண்டு.

அந்த எச்சங்களைக் கொண்டு புத்தர் தான் பிள்ளையார் என்று தலைகீழாக மீட்டுருவாக்கம் பண்ணுவது தமக்குச் சாதகமான எல்லையிலே தேடலை நிறுத்திக் கொள்வதுபோல அபத்தமான காரியம்.

சுபா தேவநாதன் கேள்வியின் மறுமொழி கருத்தாக்கம் : கார்த்திக் புகழேந்தி

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு