1957 ம் ஆண்டு சங்கத்திற்காக தற்போதுள்ள 1 லட்சத்து 66 ஆயிரம் சதுர அடி கொண்ட இடம் வாங்கப்பட்டது. அன்றுமுதல் நடிகர் சங்கம் இங்குதான் செயல்பட்டுவருகிறது.

நடிகர் சங்கமே கட்டிடத்தை எழுப்பும் என்ற நாசர்., கார்த்திக் விஷால் தலைமையில் உள்ள புதிய நிர்வாகம், ரூ.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நான்கு மாடிகளுடன் புதிய கட்டிடம் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட திட்டமிடப்பட்டது. இதற்கான பூமி பூஜை மார்ச் 31 ம் தேதி போடப்பட்டது

Special Correspondent

இந்நிலையில் நடிகர் சங்க உறுப்பினரும் சமூக ஆர்வலருமான வாராகி தெரிவிக்கும் பகீர் விவரம்:

நடிகர் சங்க வளாகம் என சொல்லப்படும் இடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 40 அடி பொதுச் சாலை அக்காலத்திலிருந்தே உள்ளது.

1943ல் மாநகராட்சி இதை முறையாக எடுத்துக்கொண்டதற்கும் ஆவணம் உள்ளது. மற்ற அரசு ஆவணங்களிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் போர்ஜ்ரி செய்து அதிகாரிகள் துணையுடன் ஆவணங்கள் திருத்தப்பட்டு இந்த 40 அடி சாலையை ஆக்கிரமித்திருக்கிறது தற்போதைய நடிகர் சங்கம்.

பொதுவாக தாலுக்கா அலுவலகங்களில் வழங்கப்படும் பட்டா நகலில் சம்பந்தப்பட்ட இடத்தின் நான்கு திசைகள் மற்றும் அது தொடர்புடைய சாலைகள் தெளிவான நீல அகலங்களுடன் வரைபடம் (diagram) இருக்கவேண்டும். இது காலம் காலமாக பின்பற்றப்படும் விதிமுறை. ஆனால் நடிகர் சங்க கட்டிடத்திற்காக வழங்கப்பட்ட பட்டா நகலில் இவை எதுவும் இடம்பெறவில்லை. கட்டிடத்திற்காக கிண்டி தலைமையிடத்து துணை தாசில்தார் வழங்கியுள்ள பிளான் சர்வேயில் மாநகராட்சிக்கு சொந்தமான 40 அடி சாலை, திட்டமிட்டு மறைக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டிருக்கிறது.

யாரோ ஒருவர் ஓரிரு அடி அரசு நிலத்தை எங்காவது ஆக்ரமிப்பு செய்தால் காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்குமா?.. ஆனால் 8 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான 3 கிரவுண்ட் இடத்தை அதிகாரிகளின் துணையுடன் ஆக்ரமிப்பு செய்திருக்கிறது இன்றைய நடிகர் சங்கம்.

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பு நடிகர் சங்க டிரஸ்ட். இதில் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, கமலஹாசன், எஸ்.வி.சேகர், ஐசரி கணேஷ், பூச்சி முருகன் உள்ளிட்ட 9 பேர் உள்ளனர். சென்னையின் மத்தியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை சர்வசாதாரணமாக நடிகர் சங்கம் ஆவணங்களை திருத்தி மோசடியாக ஆக்கிரமிப்பு செய்திருப்பதை மக்கள் முன் நல்லவர்கள் போல காட்டிக்கொள்ளும் சினிமாக் கலைஞர்கள் இப்படி அரசு நிலத்தை ஆக்கிரமித்திருப்பதை உரிய ஆதாரங்களுடன் காவல்துறையில் புகார் அளிக்காவிட்டால் நாளை பொது ஜனம் இந்த பிரச்சனை கையில் எடுத்தால் நடிகர்கள் நமக்கு தானே அசிங்கம்? என்று சொன்னதோடு நில்லாமல் ஆதாரங்களையும் கொடுத்தார் வராகி.

Special Correspondent

ஆதாரத்தை எடுத்து கொண்டு நடிகர் சங்க விவகாரத்தினை கூர்ந்து கவனித்துவரும் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் நடிகருமான ஒருவரிடம் கேட்டபோது பெயரை வெளியிட வேண்டாம் என்று அவர் சொன்னது கேக்க தலை சுற்றியது.

"முந்தைய நிர்வாகம் முறைகேடாக செயல்பட்டதை சொல்லித்தான் புதிய நிர்வாகம் தேர்தலில் வெற்றி பெற்றது. ஆனால் துரதிர்ஸ்டவசமாக அதே தவறுகளையே புதிய நிர்வாகமும் செய்துவருகிறது. சங்கத்தில் பொறுப்பில் இத்தனைபேர் இருந்தாலும் முக்கிய விஷயங்களில் ஓரிருபேர் மட்டுமே முடிவு எடுக்கின்றனர். மற்ற நிர்வாகிகளுக்கு அதைத் தகவலாக மட்டுமே தெரிவிக்கின்றனர்.

மாநகராட்சி லேஅவுட் படி சங்கம் அமைந்திருக்கும் மாம்பலம் பகுதியில் 33 முதல் 40 அடிகள் வரை இது சாலையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 50 வருடங்களுக்கு முன் இன்றுபோல் மக்கள் தொகை, போக்குவரத்து அதிகம் இல்லை. அதனால் அன்று பயன்பாட்டில் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்று நிலைமை தலைகீழ். இரண்டு பக்கமும் கார்களை நிறுத்தினாலும் நடுவே இரண்டு கார்கள் போகும் அளவு உள்ள பெரிய சாலையை நடிகர் சங்கம் என்ற பெரிய நிறுவனம் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யலாமா?...

உச்சநீதிமன்றம் இதுகுறித்து கடுமையான உத்தரவுகளை பிறப்பித்திருப்பதை எடுத்துச்சொல்லியும் அவர்கள் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மோசடி அரசியல்வாதிகளின் ஆக்கிரமங்களை திரையில் தட்டிக்கேட்டுவிட்டு நிஜத்தில் நாமே அதை செய்தால் எப்படி?...

ஆக்கிரமிப்பு இடத்தை எப்போது வேண்டுமானாலும் மாநகராட்சிக்கு திருப்பி அளிக்கவேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் இன்றைய நிர்வாகம் செயல்படுகிறது. யாரிடமும் கலந்தாலோசிப்பது கிடையாது. கட்டிடம் கட்டுவது தொடர்பாக யாரிடமும் அவர்கள் கலந்துபேசவில்லை. கட்டிடம் கட்ட டெண்டர் விடவேண்டும் என்பது முதல் சட்டச் சிக்கல் வரை மூத்த உறுப்பினர்கள் சொன்னதை காதுகொடுத்துக் கேட்கவில்லை விஷால் அணி.

கட்டிடம் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ள 18 கிரவுண்ட் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 5 கிரவுண்ட் போனால் மீதமுள்ள 13 கிரவுண்ட் இடத்தில்தான் கட்டிடம் எழுப்பமுடியும். கிட்டதட்ட 3 ல் 1 பங்கு இடம் இல்லாமல்போனபின் அனுமதி தரப்பட்டுள்ள பிளான்படி எப்படி கட்டிடத்தை எழுப்ப முடியும் என்று முடித்து கொண்டார்.

நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் தரப்பில் தெரிவித்த கருத்து:

“நடிகர் சங்கம் தற்போதுள்ள இடம் 1957ம் ஆண்டு வாங்கப்பட்டது. அப்போதைய அரசு ஆவணங்களில் சாலை பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை.

1942ம் ஆண்டு இந்த இடத்திற்கு தனியார் சிலர் லேஅவுட் போட்டிருக்கிறார்கள். அதை வைத்துத்தான் இது சாலைப்பகுதி என இப்போது பிரச்னை கிளப்புகிறார்கள் சிலர். அவர்கள் சொல்வதுபோல் அது சாலையாக இருந்திருந்தால் இந்த 60 வருடங்களில் அதை மாநகராட்சி கையகப்படுத்தியிருந்திருக்கும். ஆனால் மாநகராட்சி பதிவேடுகளில் சாலையாக இல்லாததால்தான் அவர்கள் அப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. இதுதான் உண்மை.

2013ம் ஆண்டு முந்தைய நிர்வாகம் பொறுப்பில் இருந்தபோதே அந்தப் பகுதியின் குடியிருப்புவாசிகள் சங்கத்தை சேர்ந்த சிலர் அன்றைக்கு சரத் அணியினரால் கட்டிடம் கட்ட கான்ட்ராக்ட் விடப்பட்ட நிறுவனத்துக்கு எதிராக இதே 1942 ம் வருட ஆவணத்தை வைத்துத்தான் வழக்கு தொடுத்தனர்.

ஆனால் இன்று வரை அந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதே அவர்களின் ஆவணத்தில் உண்மைத்தன்மை இல்லை என்பதற்கு சாட்சி என்கிறார்கள்.

இந்த சாலை பற்றி மூத்த வழக்கறினர் கருத்தை கேட்ட போது, எந்த இடைக்கால உத்தரவும் தரப்படவில்லை என்றாலும் வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதும் உண்மை தானே என்றார். சரத்குமார் தலைமையில் அணிக்கு இருந்த அதே சட்ட பிரச்சனையை முடிக்காமல் அந்த வழக்கை வைத்து கொண்டே கட்டிடம் கட்டுவது பிரச்னைக்கு தீர்வு ஆகுமா...

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு