குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக பதவியில் நீடிக்க வேண்டும் என்று விரும்பினால் ரூ.30 லட்சம் தரவேண்டும் என்று அமைச்சர் சரோஜா மிரட்டல் விடுத்தார் என தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ராஜம்மீனாட்சி மீடியா முன்னணியில் கூறியதை கேட்ட மீடியாக்களே அதிர்ந்தது.

Special Correspondent

இதுதொடர்பாக தர்மபுரியில் நேற்று பேட்டி அளித்த அதிகாரி ராஜம்மீனாட்சி அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்தார். பின்னர் இன்று காலை “தனக்கு மிரட்டல் விடுத்து ரூ.30 லட்சம் கேட்ட அமைச்சர் சரோஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் சரோஜா மீது அவர் புகார் அளித்தார்.

கடந்த 7-ந்தேதி அன்று சென்னையில் உள்ள அமைச்சரின் வீட்டில் வைத்து தான் மிரட்டப்பட்டதாகவும், அங்கிருந்து உயிர் பிழைப்பதற்காக தப்பி வந்தேன் என்றும்,

இதோ குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ராஜம்மீனாட்சி புகார் விவரம் :

நான் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராக ஜெயலலிதாவால் நேரடியாக நியமிக்கப்பட்டு பணியில் நற்பெயர் எடுத்துள்ளேன். அவரது மறைவுக்கு பிறகு என்னால் இந்த பணியில் நிம்மதியாக செயல்பட முடியவில்லை. சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவால் தொடர்ந்து சிரமப்படுத்தப்பட்டு வருகிறேன். இந்த பதவிக்கு ரூ.10 லட்சம் வாங்கி கொண்டு தான் பணி உத்தரவு வழங்குவதாக கூறினார்.

அவரது கணவரும் தொடர்ந்து மிரட்டியதால், கடந்த பிப்ரவரியில் ரூ.10 லட்சத்தை கொடுத்தேன். தற்சமயம் எனது குழந்தையுடன் சென்னையில் சேர்ந்திருக்கவும், எனது உடல்நிலை ஆபரேசன் (குடலிறக்கம்) செய்து உள்ளதாலும் சென்னையில் எனது பெற்றோருடன் இருந்து பணிபுரிவதற்காகவும் பணி இடம் மாற்றி சென்னைக்கு வழங்குமாறு விண்ணப்பம் வழங்கி இருந்தேன். இது சம்பந்தமாக பேச வருமாறு அமைச்சர் அழைத்ததின் பேரில், துறை சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் கடந்த 7-ந்தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் அமைச்சர் வீட்டுக்கு சென்றேன்.

அப்போது சென்னைக்கு நீ டிரான்ஸ்பர் கேட்ட மனுவை பார்த்தேன். அதற்கு ரூ.20 லட்சம் கொடு. உனக்காக இனி ஆதரவு தர யாருமில்லை. வரும் நான்கு வருடத்தில் ரூ.4 ஆயிரம் கோடியாவது நானும் சம்பாதிக்க வேண்டும். இதற்கு ஒத்துழைக்க உன்னால் முடியாது என்றால் தொலைத்து விடுவேன்.

முடிந்தால் இந்த பணிக்கான இன்றைய ரேட்டான ரூ.30 லட்சம் கொடு. இல்லையேல் அதை தர காத்திருப்போருக்காக விட்டுக்கொடு. மீறினாலோ, வெளியில் சொன்னாலோ உனது வேலையை நீக்குவதுடன் உன்னையும் அழித்து விடுவேன் என மிரட்டுகிறார்.

எங்கள் குடும்பத்தார் மீதுள்ள அபிமானத்தால் அம்மாவால் நேரடியாக வழங்கப்பட்ட இந்த பணியை புனிதமாக போற்றி சேவை செய்து வருகிறேன். குழந்தைகளின் நலனுக்காக அவர் சிந்தித்து உருவாக்கிய இந்த துறையின் பெருமையை பணம், பணம் என நச்சரித்து, இந்த துறை அமைச்சர் தொடர்ந்து டார்ச்சர் தருவதால் நிம்மதியாக பணி செய்வதில் தடங்கல் ஏற்பட்டு மன உளைச்சலுடன் பரிதவிக்கிறேன். எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் உயிர் பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு