பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் காலை தங்கக்குதிரையில் மதுரை வந்த அழகருக்கு, மூன்றுமாவடியில் பக்தர்கள் திரளான எதிர்சேவை நடத்தி வரவேற்றனர்.

Special Correspondent

அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில், தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணிக்கு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நேற்று அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பண சுவாமி கோயிலுக்கு வந்து, ஆயிரம் பொன் சப்பரத்தில் அழகர் எழுந்தருளினார்.

பின்னர் 3 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில், வைகையாற்றுக்கு புறப்பட்டார். காலை 6.20 மணிக்கு வைகையாற்றின் கரைக்கு வந்த அழகரை, வெள்ளிக்குதிரையில் வீற்றிருந்த வீரராகவப்பெருமாள் வரவேற்றார்.

சரியாக 6.38 மணிக்கு வைகையில் அழகர் எழுந்தருளினார். பச்சை பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில் ஆற்றில் அழகர் இறங்கியபோது, அங்கு திரண்டிருந்த பல லட்சம் பக்தர்கள் பரவசத்துடன் கோஷமிட்டனர்.

வைகையில் தண்ணீர் இல்லாததால், அங்கு கட்டப்பட்டிருந்த பிரமாண்ட தொட்டியில் நிரப்பப்பட்டிருந்த தண்ணீரில் அழகர் இறங்கினார்.

பின்னர் ஆற்றில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு ராமராயர் மண்டபம் சென்றார். அழகர் வேடமிட்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அழகர் மீதும், திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர வைத்தனர்.

அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வைகை ஆற்றில் முடி காணிக்கை செலுத்தினர்.

இன்று காலை தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு, அழகர் சாப விமோசனம் அளிக்கிறார். தொடர்ந்து தசாவதாரம், பூப்பல்லக்கு நிகழ்ச்சிகளுக்கு பின்னர், வரும் 15ம் தேதி அழகர், மலைக்கு திரும்புகிறார்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு