நாளை அறிவிக்கப்படும் என்று இருந்த போராட்டம் தீடிர் என இன்று அறிவித்து பேருந்துகளை நிறுத்தி விட்டனர் போக்குவரத்து ஊழியர்கள். போக்குவரத்து கழக அமைச்சருடன் தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Special Correspondent

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்க வேண்டிய ரூ.7,000 கோடிக்கு பதில் ரூ.2000 கோடி தர அரசு முடிவு செய்தது. இதனை தொழிலாளர்கள் ஏற்க மறுத்தனர். நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரியிருந்தன.

இந்நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த தகவல் கிடைத்ததும் பல்வேறு இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அரசு நாமம் போட்டுவிட்டதாக போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனை மறுத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 37 தொழிற்சங்கங்கள் அரசுக்கு ஆதரவாக உள்ளன என தெரிவித்தார். மேலும் 20 ஆண்டாக உள்ள பாக்கியை ஒரே நாளில் கொடுக்க முடியாது என்று கூறிய அவர் ரூ.1,250 கோடி நிதி கொடுக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. புதன், வியாழனில் ரூ.750 கோடி வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். கூட்டுறவு சங்கங்களுக்கு புதன்கிழமை ரூ.171 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.

மேலும் தொழிலாளர்களை தொழிற்சங்கத்தினர் திசை திருப்புவதாக அமைச்சர் குற்றம்சாட்டி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த அமைச்சர், வேலை நிறுத்தத்தை முறியடிக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓய்வு பெற்றவர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் களத்தில் அரசின் எந்த பேருந்தும் ஓடாத காரணத்தினால், ஷேர் ஆட்டோ, ஆட்டோ, தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொது மக்கள் குறை கூறினார்கள். மேலும் அரசின் போக்குவரத்து மொத்தமாக முடங்கி உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்திகள் பல்வேறு மாவட்டங்களின் இருந்து வந்த வண்ணம் உள்ளன.

இதன் இடையே மாநில அரசு மத்திய அரசை கேட்டு கொண்டதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பேருந்து நிறுத்தப்பட்டதால் சென்னையில் மின்சார ரயில் நிலையம், MRTS நிலையத்தில் கூட்டம் அதிகரித்து திருவிழா காலம் போல காணப்படுகிறது.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு