2013 முதல் தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி விற்பனை செய்ய அனுமதி வழங்க அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் உள்பட பலருக்கு ரூ.40 கோடி லஞ்சம் வழங்கப்பட்ட ஆதாரத்தை பிரபல ஆங்கில டிவி டைம்ஸ் நொவ் வெளியிட்டது`.

மதுரையை சேர்ந்த கே.கதிரேசன். ஏஐடியூசியில் நகர செயலாளராக உள்ளார். இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்த விவரம் :

Special Correspondent

தமிழக டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன், கடந்த 30.6.2017ல் ஓய்வு பெற வேண்டும். ஆனால், இவரது பணியை 1.7.2019 வரை 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2016ல் வருமான வரித்துறையினர் சென்னையில் சோதனையிட்டபோது, அனுமதியின்றி குட்கா தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டது தெரியவந்தது. அங்கு கைப்பற்றிய ஆவணங்களில் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்சமாக பணம் கொடுத்ததும் தெரிந்தது.

அப்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த, தற்போதைய டிஜிபி ராஜேந்திரன் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் விசாரணையில் உள்ளதாக பதிலளித்தார். விசாரணை நிலுவையில் இருக்கும்போது, டிஜிபிக்கு பணி நீட்டிப்பு வழங்கியது தவறு. எனவே, டிஜிபிக்கு பணி நீட்டிப்பு வழங்கிய உத்தரவிற்கு இடைக்காலத்தடை விதிக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணையை, சிபிஐ இணை இயக்குநர் தலைமையிலான சிறப்புக்குழுவின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீலை பார்த்து நீதிபதிகள், ‘எதற்காக மனு செய்துள்ளீர்கள்’ என்றனர்.

இதற்கு மனுதாரர் வக்கீல் கண்ணன், ‘டிஜிபிக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும்’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கே.கே.சசிதரன், ‘அவர் மீது பத்திரிகை செய்தி தவிர்த்து உங்களிடம் வேறு என்ன ஆதாரங்கள் உள்ளன’ என்றார்.

அதற்கு வக்கீல் கண்ணன் கூறுகையில், ‘’வருமானவரித்துறையினர் சோதனையின்போது சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், லஞ்சம் கொடுத்துள்ளது தெரிய வந்தது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச்செயலர் மற்றும் உள்துறைச்செயலருக்கு வருமான வரித்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அதில் டிஜிபி ராஜேந்திரன் தொடர்பு குறித்த ஆதாரங்கள் உள்ளன.

டிஜிபியாக நியமிக்கும் முன் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு (யூபிஎஸ்சி), ராஜேந்திரன் மீதான குற்றச்சாட்டு குறித்து தெரிவிக்கவில்லை. எனவே, அவர் பணியில் தொடர அனுமதிக்க கூடாது.‘’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், "டிஜிபி நியமனம் தொடர்பாக யூபிஎஸ்சிக்கு அனுப்பியது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தலைமைச்செயலர் தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரித்துறை சோதனையில் அரசு அதிகாரிகள் மற்றும் பொது ஊழியர்கள் (மக்கள் பிரதிநிதிகள்) மீதான லஞ்சப்புகார் தொடர்பாக, தலைமைச்செயலருக்கு அனுப்பப்பட்ட அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும், வருமான வரித்துறையின் தலைமை கமிஷனர் தாக்கல் செய்ய வேண்டும்.

தலைமை செயலரின் பரிந்துரையின்பேரில், உடனடியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மற்றும் விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் தாக்கல் செய்ய வேண்டும். இந்த அனைத்து ஆவணங்களும் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும்‘’ என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 10க்கு தள்ளி வைத்தனர்.

மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு (யூபிஎஸ்சி) உண்மையை மறைத்த விவரம் தெரியும் பொது அது சம்பத்தப்பட்ட டிஜிபி மட்டுமல்ல அவரை பரிந்துரை செய்த தலைமை செயலர் நோக்கமும் கேள்வி குறியாகி விடும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு