சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) மூலமும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நகர் ஊரமைப்பு இயக்ககம் (டிடிசிபி) மூலமும் வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தேவையான கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி மற்றும் பணிநிறைவு சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால் இதனை மீறி கடந்த காலங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களால் விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்பட்டது.

இதனை தடுக்க புதிதாக நகர் அமைப்பு சட்டம் 113சி என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டது. இதை தொடர்ந்து விதிகளை மீறி 1.7.2007க்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களை கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் குழு கடந்த 2014ல் அமைக்கப்பட்டது. இந்த குழு உறுப்பினர்களாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உறுப்பினர்-செயலர், நகர் ஊரமைப்பு திட்ட ஆணையர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், அண்ணா பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முதன்மை திட்ட அலுவலர் ஆகியோர் செயல்பட்டனர் .

Special Correspondent

இந்த குழு சார்பில் பல கூட்டங்கள் நடத்தியும், மக்களிடம் கருத்து கேட்டு முழுமையாக அறிக்கையாக தயாரித்தது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளை அறிக்கையாக அரசிடம் தாக்கல் செய்தது. அக்குழுவின் பரிந்துரைப்படி விதிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது., அனுமதியற்ற கட்டிடங்களை வரன்முறை செய்ய, முறைப்படுத்தும் விதிகளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இதன்படி., 1.7.2007 அன்றோ அல்லது அதற்கு முன்பாக அனுமதியற்ற/ விதிமீறல்களுடன் கட்டப்பட்ட அனைத்து தனியார் கட்டிடங்களின் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட அபிவிருத்தியாளர்கள் தங்கள் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த, இதற்கான கட்டணங்களை சுயமதிப்பீடு செய்து, இவ்விதிகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அக்கட்டணங்களுடன் கட்டாயமாக இணையதளம் வழியாக விண்ணப்பிக்கவேண்டும்.

சிம்டிஏ, டிடிசிபி எல்லையில் அமைந்துள்ள சாதாரண கட்டிடங்களில் 2 மடங்கு வரை கூடுதல் பரப்பளவு இருக்கலாம். சாலை வசதிகள் இருக்க வேண்டும். சிறப்பு கட்டிடங்களில் 3 மடங்கு வரை கூடுதல் கட்டிட பரப்பளவு இருக்கலாம். 7 மீட்டர் வரை சாலை இருக்க வேண்டும். பக்கவாட்டு காலியிடங்கள் இருக்க வேண்டும். வாகன நிறுத்த வசதி பற்றாக்குறை இருந்தால் கட்டணம் செலுத்த வேண்டும். அடுக்குமாடி கட்டிடங்களில் ஐந்து மடங்கு வரை கூடுதல் பரப்பளவு இருக்கலாம். தளங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 9 முதல் 18 மீட்டர் சாலை வசதி இருக்க வேண்டும். அதிக பட்சமாக 19 தளங்கள் வரையிலான விதிமீறல் கட்டிடங்கள் வரன்முறைப்படுத்தப்படும்.

எனினும், நீர்நிலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமானது உட்பட பொது இடங்களில் கட்டியிருக்கும் கட்டிடங்கள் தகுதியற்றதாக கணக்கிட்டு, மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

மேலும் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் விதிமுறைகள், கடலோர பகுதி விதிமுறைகள், விமான படைத்தள விதிமுறைகள், ராணுவ விதிமுறைகள், மலையிடப்பகுதி பாதுகாப்பு விதிமுறைகள், தமிழ்நாடு நியூக்ளியர் நிறுவுதல் விதிமுறைகள் போன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். பொது இடப்பகுதிகள், சாலைகள், தெருக்கள், அரசு / உள்ளாட்சி நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்கள், நீர்நிலைப்பகுதிகள், முழுமைத் திட்டம் அல்லது விரிவான வளர்ச்சி திட்டம் அல்லது புதுநகர் வளர்ச்சித் திட்டம் அல்லது ஒப்புதல் பெற்ற மனைப்பிரிவுகளில் உள்ள பூங்கா மற்றும் விளையாட்டு திடலுக்காக ஒதுக்கிய திறந்தவெளிப்பகுதி போன்ற இடங்களில், கட்டிய கட்டிடங்கள் இத்திட்டத்தின்கீழ் வரன்முறை செய்ய கருதப்படமாட்டாது.

சென்னைப் பெருநகர் பகுதியில் நிலத்தடி நீர் பிடிப்பு பகுதி மற்றும் செங்குன்றம் நீர்ப்பிடிப்பு பகுதியிலுள்ள அனுமதியற்ற கட்டிடங்கள் வரன்முறைப்படுத்த இயலாது. சாலை அகல தேவை, பக்க இடவெளித்தேவை, தளப்பரப்பு குறியீடு தேவை, வாகன நிறுத்துமிடம் மற்றும் திறந்தவெளி பகுதி தேவை போன்ற திட்ட காரணிகள் குறித்து விதிவிலக்குகள், தீப்பாதுகாப்பு மற்றும் கட்டிட உறுதித் தன்மைக்கு உட்பட்டு, நீதிபதி ராஜேஸ்வரன் குழுவின் பரிந்துரையினை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தங்களுடைய கட்டிடங்களை வரன்முறைப்படுத்த விரும்புவோர் வழக்கமான வளர்ச்சி கட்டணம், கூடுதலாக உள்ள தளப்பரப்பு குறியீடுகளுக்கு ஊக்க தளப்பரப்பு குறியீட்டு கட்டணம், வாகன நிறுத்துமிட குறைபாடு கட்டணம், திறந்தவெளிப்பகுதி விதிமீறல்களுக்கான கட்டணங்கள் செலுத்தவேண்டும். மேலும், வரன்முறைப்படுத்துவதற்கான அபராத தொகையினை உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் கட்டணத்தின் குறிப்பிட்ட விழுக்காடு அடிப்படையில் அவர் அடைந்த தளப்பரப்பு குறியீட்டுக்கு ஏற்றவாறு செலுத்தவேண்டும்.

இத்திட்டத்தின்கீழ் வரன்முறைப்படுத்த தகுதியற்ற கட்டிடங்களுக்கு குடிநீர், கழிவுநீர், வடிகால் இணைப்புகள் மற்றும் மின்சார இணைப்புகளை துண்டிக்கும் வகையிலும், இவ்வகை சொத்துக்களை பிற நபருக்கு விற்க தடை விதிக்கும் வகையிலும், உரிய துறைகளான குடிநீர் வாரியம், மின்சார வாரியம், பதிவுத்துறை ஆகிய துறைகள் தத்தம் சட்டம் மற்றும் விதிகளில் உரிய திருத்தம் மேற்கொள்ளும்.

மேலும்குடியிருப்பு கட்டிடங்களில் கார் நிறுத்துமிடம் விதிமீறல் இருந்தால் ரூ.10 ஆயிரம், வணிக கட்டிடங்களில் சென்னையில் ரூ.1 லட்சம், பிற நகரங்களில் ரூ.50 ஆயிரம், டூவிலர் நிறுத்துமிடம் விதிமீறல் இருந்தால் ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும். திறந்தவெளி ஒதுக்கீட்டு கட்டணம், வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் கணக்கிடப்படும். தற்போது அமலில் உள்ள உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி கட்டணம், வளர்ச்சி கட்டணங்கள் வரன்முறை கட்டிடங்களுக்கு பொருந்தும். வரன்முறைக்கு சாதாரண கட்டிடங்களுக்கு சதுர அடிக்கு ரூ.1. மற்ற கட்டிடங்களுக்கு சதுர அடிக்கு 2 கட்டணமாக வசூலிக்கப்படும்.

கட்டிடங்கள் தளப்பரப்பு தவிர்த்து மற்ற விதி மீறல் இருந்தால் 100 சதவீதமும், மூன்று மடங்கு வரை கூடுதல் தளங்கள் இருந்தால் 200 சதவீதம், மூன்று மடங்குக்கு மேல் கூடுதல் தளங்கள் கட்டப்பட்டிருந்தால் 300 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். வரன்முறைக்கு தகுதி பெற்ற கட்டிடங்களுக்கு அதற்கான கட்டணங்கள் குறித்து நோட்டீஸ் வழங்கப்படும் என்று அரசின் செய்து குறிப்பு தெரிவிக்கிறது .

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு